கனடா செய்திகள்

அடுக்கு மாடிக் குடியிருப்பின் வீடொன்றில் இருந்து இருவரின் சடலங்கள் மீட்பு

10 Jan 2019

ரொறன்ரோவின் ஸ்கார்பாரோ சந்திப் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பின் வீடொன்றில் இருந்து இருவர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு செயிண்ட் கிளேர் அவென்யூற்கு தெற்கே, 544 பேர்ச்மவுண்ட் வீதியில் அமைந்துள்ள குறித்த அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் எட்டாவது மாடியில் இருந்து நேற்று பிற்பகல் 2.30 அளவில் அந்த சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் ஒன்று 40 வயதுடைய ஆணினதும், மற்றையது 30 வயதுடைய பெண்ணினதும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முதலில் ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதை பொலிஸார் கண்டுள்ளதைத் தொடர்ந்தே அங்குள்ள வீடு ஒன்றினுள் பெண் ஒருவரும் சடலமாக கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த அந்தப் பகுதியில் ஒருவர் கத்தியுடன் நடமாடுவதாக கிடைத்த முறைப்பாட்டினையடுத்து அங்கு விரைந்த நிலையிலேயே பொலிஸார் இந்த சடலங்களை கண்டுபிடித்தனர்.

அதேவேளை உயிரிழந்த குறித்த அந்த இருவரும் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்ற தெளிவான காரணங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை என்ற போதிலும், இருவரது உடல்களிலும் தாக்குதல்களுக்கு உள்ளானமைக்கான அடையாளங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. எவ்வாறு அவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டன என்பதனை கண்டறியும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகள் தொடர்ந்தும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதனால், இவர்களின் மரணம் குறித்த எவ்வாறான காரணங்களையும் நிராகரிக்க முடியாது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்கள் மிக குறைந்த அளவிலேயே தம்மிடம் இருப்பதாகவும், இதனைக் கொண்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்..


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்